Gmail திட்டக் கொள்கைகள்

கீழேயுள்ள திட்டக் கொள்கைகள் Gmailலுக்குப் பொருந்தும். Gmailலைப் பயன்படுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தொடர்ந்து வழங்குவதில் இந்தக் கொள்கைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வாடிக்கையாளர் கணக்கின் (எ.கா. @gmail.com) மூலம் Gmailலைப் பயன்படுத்தினால் கூடுதல் தகவல்களுக்கு Googleளின் சேவை விதிமுறைகளைப் பார்க்கவும். பணி, பள்ளி அல்லது வேறொரு நிறுவனத்தின் மூலம் கணக்கைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால் Google உடன் உங்கள் நிறுவனம் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ பிற கொள்கைகளின்படியோ விதிமுறைகள் பொருந்தக்கூடும். உங்கள் நிர்வாகியால் கூடுதல் தகவல்களை வழங்க முடியும்.

இந்தச் சேவைகளை வழங்கும் எங்கள் திறனிற்கு அச்சுறுத்தலான தவறான பயன்பாடுகளைத் தடுக்க வேண்டும். மேலும் இந்த இலக்கை அடைய உதவும் வகையில் கீழே உள்ள கொள்கைகளை அனைவரும் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சாத்தியமான கொள்கை மீறல் குறித்து எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட பிறகு உள்ளடக்கத்தை மதிப்பாய்வு செய்து, Google தயாரிப்புகளுக்கான பயனரின் அணுகலைக் கட்டுப்படுத்துவது அல்லது நீக்குவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுப்போம். உங்கள் கணக்கு தவறுதலாக முடக்கப்பட்டுள்ளது எனக் கருதினால் இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

சேமிப்பக ஒதுக்கீட்டு வரம்புகளை மீறும் கணக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படக்கூடும். உதாரணத்திற்கு, சேமிப்பக ஒதுக்கீட்டை நீங்கள் மீறினால் மெசேஜ்கள் அனுப்புவதை/பெறுவதை நாங்கள் தடுக்கக்கூடும். நீங்கள் சேமித்துள்ளவற்றைக் குறைக்கவில்லை என்றாலோ கூடுதல் சேமிப்பகத்தை வாங்கவில்லை என்றாலோ உங்கள் கணக்கிலுள்ள உள்ளடக்கத்தையும் நாங்கள் நீக்கக்கூடும். சேமிப்பக ஒதுக்கீடுகள் குறித்து இங்கே மேலும் அறிக.

இந்தக் கொள்கைகள் அடிக்கடி மாறக்கூடும் என்பதால் அவ்வப்போது இவற்றைச் சரிபார்க்கவும்.

தவறான பயன்பாட்டைப் புகாரளி

எங்கள் திட்டக் கொள்கைகளை ஒரு கணக்கு மீறியுள்ளதாகக் கருதினால் அது குறித்துப் புகாரளிக்கப் பல்வேறு வழிகள் உள்ளன:

தவறான செயல்பாடு என்பதை எவ்வாறு விவரிக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்வதற்குக் கீழேயுள்ள கொள்கைகளைப் படித்துப் பார்க்கவும். தனது கொள்கைகளை மீறும் கணக்குகளை Google முடக்கக்கூடும். தவறுதலாக உங்கள் கணக்கு முடக்கப்பட்டுள்ளது எனக் கருதினால் இந்தப் பக்கத்தில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றவும்.

கணக்கின் செயலற்ற நிலை

செயலில் இருப்பதற்கு தயாரிப்பைப் பயன்படுத்தவும். குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறையாவது தயாரிப்பு அல்லது அதன் உள்ளடக்கத்தை அணுகுதல் இதில் அடங்கும். செயலில் இல்லாத கணக்குகளைப் பொருத்தவரை தயாரிப்பில் இருந்து மெசேஜ்களை நீக்குவது போன்ற நடவடிக்கையை நாங்கள் எடுக்கக்கூடும். இங்கே மேலும் அறிக.

ஸ்பேமும் பல்க் மின்னஞ்சலும்

ஸ்பேம் அல்லது சட்டத்திற்குப் புறம்பான வணிக மின்னஞ்சலை அனுப்ப Gmailலைப் பயன்படுத்தக்கூடாது.

CAN-SPAM சட்டம் அல்லது பிற ஸ்பேம் தடுப்புச் சட்டங்களை மீறி மின்னஞ்சலை அனுப்புவது; இலவச உரிமம் உள்ள, மூன்றாம் தரப்புச் சேவையகங்கள் வழியாக அங்கீகரிக்கப்படாத மின்னஞ்சலை அனுப்புவது; பிறரின் மின்னஞ்சல் முகவரிகளை அவர்களின் ஒப்புதல் பெறாமல் விநியோகிப்பது போன்ற செயல்களுக்கு Gmailலைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை.

பயனர்களைத் திசைத்திருப்பும் அல்லது ஏமாற்றும் விதத்தில் மின்னஞ்சல்களைத் தானாக அனுப்பும்படி, நீக்கும்படி அல்லது வடிகட்டும்படி Gmail இடைமுகத்தை அமைக்க அனுமதியில்லை.

”அனுமதி பெறாதது” அல்லது ”தேவையற்ற” மின்னஞ்சல் தொடர்பான உங்கள் வரையறை மின்னஞ்சலைப் பெறுபவர்களின் கண்ணோட்டத்திலிருந்து வேறுபடலாம் என்பதை நினைவில்கொள்ளவும். முன்பு உங்களிடமிருந்து மின்னஞ்சலைப் பெறுவதற்குப் பயனர்கள் தேர்வுசெய்திருந்தாலும் அதிக எண்ணிக்கையிலான பெறுநர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பும்போது விதிமுறைகளைக் கருத்தில் கொள்ளவேண்டும். Gmail பயனர்கள் மின்னஞ்சல்களை ஸ்பேம் எனக் குறிக்கும்போது, எதிர்காலத்தில் நீங்கள் அனுப்பும் மெசேஜ்களும் தவறான பயன்பாட்டைத் தடுக்கும் எங்கள் சிஸ்டங்களால் ஸ்பேம் என வகைப்படுத்தப்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது.

Gmail கணக்குகள் பலவற்றை உருவாக்குதலும் பயன்படுத்துதலும்

Google கொள்கைகளைத் தவறாகப் பயன்படுத்துவது, Gmail கணக்கு வரம்புகளைப் பொருட்படுத்தாமலிருப்பது, வடிப்பான்களை மீறுவது, உங்கள் கணக்கில் உள்ள கட்டுப்பாடுகளைத் தகர்த்தெறிவது போன்றவற்றுக்காகப் பல கணக்குகளை உருவாக்கவோ பயன்படுத்தவோ கூடாது. (உதாரணத்திற்கு, நீங்கள் வேறொரு பயனரால் தடுக்கப்பட்டிருந்தாலோ தவறான பயன்பாடு காரணமாக உங்கள் Gmail கணக்கு முடக்கப்பட்டிருந்தாலோ அதே போன்ற செயல்களில் ஈடுபடுவதற்காக மற்றொரு கணக்கை உருவாக்கக் கூடாது.)

தன்னியக்க முறையில் Gmail கணக்குகளை உருவாக்குவது அல்லது அவ்வாறு உருவாக்கப்பட்டவற்றை வாங்குவது, விற்பது, வணிகம் செய்வது, பிறருக்கு மறுவிற்பனை செய்வது போன்றவற்றுக்கும் அனுமதியில்லை.

மால்வேர்

வைரஸ்கள், மால்வேர், வோர்ம்கள், பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கோப்புகள், டிரோஜன் ஹார்ஸ்கள், சிதைந்த கோப்புகள், சிதைக்கும் அல்லது ஏமாற்றும் இயல்புள்ள பிற விஷயங்கள் போன்றவற்றைப் பரப்ப Gmailலைப் பயன்படுத்தக்கூடாது. அதோடு, Google/பிறரின் நெட்வொர்க்குகள், சேவையகங்கள் அல்லது பிற உள்கட்டமைப்பின் செயல்பாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய குறுக்கீடு செய்யக்கூடிய உள்ளடக்கத்தை வழங்கக்கூடாது.

மோசடி, ஃபிஷிங் மற்றும் பிற ஏமாற்ற நடவடிக்கைகள்

பிற பயனர்களின் வெளிப்படையான அனுமதி இல்லாமல் அவர்களின் Gmail கணக்கை உங்களால் அணுக முடியாமல் போகக்கூடும்.

ஃபிஷிங்கிற்காக Gmailலைப் பயன்படுத்தக்கூடாது. கடவுச்சொற்கள், நிதி விவரங்கள், தேசிய அடையாள எண்கள் உட்பட (ஆனால் இவை மட்டுமே அல்ல) முக்கியத் தரவைக் கோருவதை அல்லது சேகரிப்பதைத் தவிர்க்கவும்.

தவறான பாசாங்குகளைச் செய்து பிற பயனர்களிடமிருந்து தந்திரமாகவோ அவர்களைத் திசை திருப்பியோ ஏமாற்றியோ தகவல்களைப் பெறும் வகையிலான மெசேஜ்களை அனுப்பக்கூடாது. ஏமாற்றுவது, தவறாக வழிநடத்துவது போன்ற நோக்கத்துடன் வேறொரு நபர்/நிறுவனத்தைப் போல் ஆள்மாறாட்டம் செய்வது போன்றவை இவற்றில் அடங்கும்.

சிறார் பாதுகாப்பு

சிறார் பாலியல் கொடுமை சார்ந்தவற்றை Google ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. அதுபோன்ற உள்ளடக்கம் இருப்பதாக எங்களுக்குத் தெரியவந்தால் நேஷனல் சென்ட்டர் ஃபார் மிஸ்ஸிங் அன்ட் எக்ஸ்ப்ளாய்டெட் சில்ட்ரன் (National Center for Missing and Exploited Children) அமைப்பில் சட்டப்படி புகாரளிப்போம். இதுபோன்ற நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திய Gmail கணக்குகளை முடக்குவது உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கையும் எடுப்போம்.

Gmailலைப் பயன்படுத்தித் தவறான எண்ணத்துடன் சிறாரை அணுகுவதை Google தடைசெய்கிறது. இதில் சிறார் பாலியல் கொடுமை, கடத்தல், சிறார்களைத் தவறான காரியங்களுக்குப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடும் நோக்கில் சிறார்களுடன் பழகுதலும் அடங்கும்.

ஒரு குழந்தைக்கு, தவறாகப் பயன்படுத்துதல், தவறாக வழிநடத்துதல், கடத்தல் போன்ற ஆபத்துகள் இருப்பதாகவோ அல்லது அவற்றுக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவோ நீங்கள் நினைத்தால் உடனடியாக உள்ளூர் சட்ட அமலாக்கத் துறையைத் தொடர்புகொள்ளுங்கள்.

நீங்கள் ஏற்கெனவே சட்ட அமலாக்கத்திற்குப் புகாரளித்தும் இன்னும் உதவி தேவைப்பட்டாலோ Gmailலைப் பயன்படுத்தி குழந்தை ஆபத்துக்கு உட்படுத்தப்படுவதாக/உட்படுத்தப்பட்டதாகக் கவலைப்பட்டாலோ இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி Googleளிடம் புகாரளிக்கலாம். Gmailலில் நீங்கள் தொடர்புகொள்ள விரும்பாத நபரை எப்போது வேண்டுமானாலும் தடைசெய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்.

பதிப்புரிமை

பதிப்புரிமைச் சட்டங்களுக்குக் கட்டுப்பட்டுச் செயல்படவும். பிறரின் அறிவுசார் சொத்துரிமைகளை (காப்புரிமை, வர்த்தகமுத்திரை, வர்த்தக ரகசியம் அல்லது பிற சொத்து உரிமைகள் உள்ளிட்டவை) மீறக்கூடாது. அறிவுசார் சொத்துரிமைகளை மீறுவதற்குப் பிறரை ஊக்கப்படுத்தவோ தூண்டவோ உங்களுக்கு அனுமதியில்லை. பதிப்புரிமை மீறலை இந்தப் படிவத்தைப் பயன்படுத்தி Googleளுக்குப் புகாரளிக்கலாம்.

உபத்திரவம்

பிறருக்கு உபத்திரவம் அளிக்க, மிரட்ட அல்லது அச்சுறுத்த Gmailலைப் பயன்படுத்தக்கூடாது. யாரேனும் இந்த நோக்கங்களுக்காக Gmailலைப் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் அவரின் கணக்கு முடக்கப்படும்.

சட்டவிரோத நடவடிக்கை

எல்லாவற்றையும் சட்டரீதியாகச் செய்யவும். சட்டத்திற்கு எதிரான செயல்பாடுகளை விளம்பரப்படுத்துவது, ஒழுங்கமைப்பது, அவற்றில் ஈடுபடுத்துவது ஆகியவற்றுக்கு Gmailலைப் பயன்படுத்தக்கூடாது.